Saturday, December 24, 2016

கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி

மந்தையின் துருக்கம்
நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து இந்த பூமியிலே அவதரித்த முதல் கிறிஸ்துமஸ் தினமான அன்றைய இரவு நடந்த காரியங்களை நாம் தியானிக்கலாம்.
       கர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசம் ரோமர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நாட்கள் அது. யூத மக்களின் வாழ்க்கை நிலை வித்தியாசமானது. யூத சமுதாயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்ட தருணம். நாம் வாழும் இந்த நாட்களில் பணம் பதவி, அதிகாரம் இவற்றை வைத்துதான் மதிப்பு மரியாதை எல்லாமே. ஆனால் யூத சமுதாயம் முற்றிலும்  வித்தியாசமானது. எப்படியென்றால் யூதர்களைப் பொறுத்தமட்டில் நியாயப்பிரமாணம் அவர்களின் ஜீவனைப் போன்றது. ஒருவர் நியாயப்பிரமாணத்தை கடைபிடிக்கிறதில் எவ்வளவு வைராக்கியம் காட்டுகிறாரோ அந்த அளவுக்குத்தான் மதிப்பு மரியாதை எல்லாமே. அந்த விதத்தில் நியாயப்பிரமாணங்களை அதிகமாய் கடைபிடித்தவர்கள் ஆசாரியர்கள் தான். ஆகையால் சமூகத்தின் உச்சபட்ச மதிப்ப்போடும், அதிகாரங்களோடும் வாழ்ந்தவர்கள் ஆசாரியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் தேவாலயத்தில் அதிகாரம் படைத்தவர்களாயிருந்த சதுசேயர்கள். அதற்கடுத்த நிலையில் யூத ஜெப ஆலயங்களில் அதிகாரம் பெற்றிருந்த பரிசேயர்கள். அதற்கடுத்த நிலையில் வேதபாரகர்கள் என்று சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன.
       இதில் சமூகத்தின் கடைநிலையில் வாழ்ந்தவர்கள் மேய்ப்பர்கள். அந்த மேய்ப்பர்களைக் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். அந்நாட்களில் மேய்ப்பர்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நேரம் அது. யூத மக்கள் யாவராலும் புறக்கணிக்கப்பட்டுகீழானவர்களாய், தீழ்ப்பானவர்களாய், தீட்டானவர்களாய் கருதப்பட்டவர்கள் மேய்ப்பர்கள். ஒட்டு மொத்த யூத சமுதாயமும் அவர்களைப் புறக்கணித்தது. ஏனென்று சொன்னால் நியாயப்பிரமாணத்தை கடைபிடித்தால் மட்டுமே யூதர்களிடம் கனத்தைப் பெற முடியும். ஆனால் மேய்ப்பர்களால்  யூதர்களின் நியாயப்பிரமாணத்தை எந்தவிதத்திலும் கடைபிடிக்க முடிவதில்லை. யூதர்களின் பிரமாணத்தின்படி ஒருநாளில் இரண்டு தரம் ஸ்நானம் பண்ண வேண்டும். ஆனால் தங்கள் மந்தைகளை மேய்த்துக் கொண்டு காடு மேடெல்லாம் அலைகிற மேய்ப்பர்களுக்கு இது சாத்தியமில்லை. மேலும் யூதர்களின் பிரமாணத்தின்படி மரித்துப்போன எதையும் தொடக்கூடாது. அப்படித் தொட்டால் அவர்கள் தீட்டானவர்களாய் கருதப்படுவார்கள். மேய்ப்பர்கள் காடுமேடெல்லாம் அலைகிறபடியால் இறந்து போன எதையாகிலும் மிதித்துவிடுவார்கள். ஆடுகள் ஏதாகிலும் மரித்துப்போனால் அதை அப்புறப்படுத்த அதை தூக்க வேண்டியிருக்கும். இப்படி யூதர்களின் பிரமாணத்தை எந்தவிதத்திலும் மேய்ப்பர்களால் கடைபிடிக்க முடிவதில்லை. ஆகையால் யூத சமுதாயமே அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது.  புறக்கணித்து வந்தது. மேய்ப்பர்கள் சமூகத்தின் மிக கீழான நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
       மேய்ப்பர்கள் பட்ட அவமானங்களுக்கும், நிந்தனைளுக்கும் அளவு கிடையாது. யூதர்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் எந்த விசேஷ வைபவங்களுக்கும், நல்ல காரியங்களுக்கும் மேய்ப்பர்களை அழைக்கவே மாட்டார்கள். காரணம் மேய்ப்பர்கள் தீட்டானவர்களாய் கருதப்பட்டபடியால்  அவர்கள் யாரையாகிலும் தொட்டால் அவர்களும் தீட்டுப்படுவார்கள் என்பதால் யாரும் அவர்களை திருமண நிகழ்ச்சி போன்ற எந்தக் காரியங்களுக்கும் அவர்களை அழைக்கவே மாட்டார்கள். விருந்து, பண்டிகை போன்ற எதற்குமே அவர்களை அழைக்கவே மாட்டார்கள். நல்ல செய்தி என்று எதையுமே மேய்ப்பர்கள் கேள்விப்பட்டது கிடையாது. இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா ? நல்ல செய்தி என்ற ஒன்றை அவர்கள் கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் கர்த்தரோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்குகிற நற்செய்தியை மேய்ப்பர்களிடத்தில்தான் முதலாவது அறிவித்தார்.
        இந்த மேய்ப்பர்கள் யூதர்களால் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையிலும் யூதர்களுக்கு பல வழிகளில் உதவி செய்து வந்தார்கள். எப்படியென்றால்   யூதர்கள் தேவாலயத்தில் பலி செலுத்துவதற்குத் தேவையான ஆடுகளை அதிலும் விசேஷமாய் முதற்பேறான ஆடுகளை பழுதற்றதாக பராமரித்து கொடுப்பவர்கள் இந்த மேய்ப்பர்கள்தான். மேய்ப்பர்கள் பழுதற்றதென்று சான்று கொடுத்தால் மாத்திரமே அந்த ஆட்டுக்குட்டி தேவாலயத்தில் பலியாக அங்கிகரிக்கப்படும். இப்படி பழுதற்ற முதற்பேறான ஆடுகளை பாராமரிப்பதற்கென்றே மேய்ப்பர்கள் மந்தையின் துருக்கம் என்ற ஒரு இடத்தை வைத்திருந்தார்கள். கல்லுகளை ஒன்றன் மீது ஒன்று வைத்து கோபுரம் போலக் கட்டப்பட்டிருக்கும். அதன் மேலேறி நின்று தூரத்தில் இருந்து கரடி போன்ற விலங்குகளோ அல்லது திருடர்களோ வருகிறார்களா என்று பார்ப்பார்கள். அந்த மந்தையின் துருக்கத்தைச் சுற்றிலும் ஆடுகள் மற்றும் மற்ற கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கும். பார்ப்பதற்கு ஒரு மாட்டுத்தொழுவம் போன்றே அது காட்சியளிக்கும்.  அந்த மந்தையின் துருக்க கோபுரத்தின் அடியில் ஒரு அறை ஒன்று இருக்கும். அந்த அறை எதற்கென்றால் ஒரு ஆட்டுக் குட்டி கர்ப்பந்திறந்து  முதன்முறையாக குட்டியை ஈனப்போகிறது என்றால் அதை அந்த மந்தையின் துருக்கத்துக்கு கொண்டுவந்துவிடுவார்கள். அதை கொண்டுவந்து அது தன் முதற்பேறான குட்டியை ஈன்றவுடன் அதை பெற்று, அது அங்குமிங்கும் துள்ளும்போது காயமேதும் ஏற்படாதவண்ணம் அதை துணிகளில் சுற்றிவிடுவார்கள். அதை துணிகளில் சுற்றியபின் மந்தையின் துருக்கத்தில் இருக்கும் சுண்ணாம்பினால் செய்யப்பட்ட ஒரு குழி போன்றதோர் தொட்டியில் கிடத்திவிடுவார்கள். அந்தக் குழிக்கு முண்ணனை என்று பெயர். ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்றால் அந்தக் குழி சுண்ணாம்பினால் செய்யப்பட்டிருப்பதால் அந்த ஆட்டுக் குட்டிக்கு நீண்ட நாட்களுக்கு வியாதி என்பதே வராது. அந்த முன்னனையில் கிடத்தின பிற்பாடு அதைச் சோதித்துப் பார்ப்பார்கள். அதன் பற்கள், காது மடல், கால்கள் என எல்லாவற்றையும் சோதித்துப் பார்ப்பார்கள். அந்த ஆட்டுக்குட்டி எந்த ஊனமும் இல்லாமல் பழுதற்றதாக பிறந்திருந்தால் மேய்ப்பர்கள் அடைகிற சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. உடனே அவர்கள் சந்தோஷமாய் பாட ஆரம்பித்து விடுவார்கள். மந்தையின் துருக்கத்தில் இருந்து பாடல் சத்தம் கேட்டாலே யூதர்கள் அத்தனைபேருக்கும் தெரியும் மந்தையின் துருக்கத்தில் தேவாலயத்தில் பலியிடப்படுவதற்கென்றே ஒரு பழுதற்ற முதற்பேறான ஆட்டுக்குட்டி பிறந்திருக்கிறது என்று!
.
       இன்னொரு விதத்திலும் மேய்ப்பர்கள் யூதர்களுக்கு உதவினார்கள். எப்படியெனில் நியாயப்பிரமாணத்தின்படி ஒரு ஸ்திரீ இரத்தத்தினால் தீட்டுப்படுகிறபோது அவள் இருக்கிற மனையையோ அல்லது அந்த வீட்டில் இருக்கிற பொருள்களையோ யாரும் தொடக்கூடாது. அப்படித்தொட்டால் அவர்களும் தீட்டுப்பட வேண்டியிருக்கும் (லேவி 15) ஆகையால் ஒரு ஸ்திரீ இரத்தத்தினால் தீட்டுப்படுகிறபோது அந்த வீட்டிலிருக்கிற யாவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து வீட்டிற்கு வெளியே கூடாரமிட்டுத் தங்குவார்கள். ஆனால் அவ்வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் என பலர் இருந்து அந்த ஒரு ஸ்திரீயினிமித்தம் அவ்வீட்டிலிருக்கிற அத்தனை பேரும் வெளியேற முடியாத சூழல் இருந்தால் அந்த ஸ்திரீயை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவார்கள். அவள் வீட்டைவிட்டு எங்கு போக முடியும்? அவளை நேராக மந்தையின் துருக்கத்திற்கு அனுப்பி விடுவார்கள். அவளுடைய தீட்டின் நாட்கள் நிறைவேறும் வரை அவளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு மேய்ப்பர்களுடையது. அப்படியானால் அந்த ஸ்திரீயினிமித்தம் மேய்ப்பர்கள் தீட்டுப்படமாட்டார்களா என்றால் யூதர்களைப் பொறுத்தமட்டில் மேய்ப்பர்கள் தீட்டானவர்கள்தானே ஆகையால் அவர்களுக்கு பிரச்சினை ஒன்றுமில்லை.
       இப்பொழுது யோசேப்பு - மரியாளின் காரியத்துக்கு வருவோம். குடிமதிப்பு எழுதுவதற்காக யோசேப்பும் மரியாளும் நாசரேத்திலிருந்து பெத்லெகேமுக்குப் போனார்கள். அவ்விடத்துக்கு அதாவது பெத்லெகேமுக்கு போய் அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில் அவ்விடத்திலே அதாவது பெத்லகேமிலே இருக்கையில் மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது.(லூக்கா 2 : 6). அவர்கள் பெத்லகேமிலே இருந்தார்கள் என்றால் அவர்களுக்கென்று வீடு இருந்திருக்க வேண்டுமல்லவா? ஆம். யோசேப்புக்கு வீடு இல்லாமலில்லை. வீடெல்லாம் இருந்தது. யோசேப்பு ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. தாவீதின் வம்சத்தில் வந்த ராஜ பரம்பரை. வீடு இருந்தது. இஸ்ரவேலில் யாரும் சொத்துகளை அறுதியிட்டு விற்க முடியாது.  ஆனால் என்ன ஒரு காரியம் - இப்போது சொத்திற்கு பங்காளிகள் அநேகர் இருக்கிறார்கள். 
    
       வீடு முழுவதும் குடிமதிப்பு எழுதுவதற்காக வந்த தாவீதின்  வம்சத்தாரால் நிறைந்திருக்கிறது. அப்போது மரியாளுக்கு பிரசவ காலம் நேரிட்டது. பிரசவத்தின் போது மரியாள் இரத்தத்தினாலாகிய தீட்டுப்படுவாள். அப்போது அந்த வீட்டில் இருக்கிற அத்தனை பேரும் மரியாளால் தீட்டுபட வேண்டியிருக்கும். ஆகையால் அவ்வீட்டிலிருக்கிற அத்தனைபேரும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய சூழல். ஆனால் அவள் ஒருத்தியினிமித்தம் அத்தனைபேரும் வெளியேற வாய்ப்பில்லை. ஆக மரியாளைத்தான் வெளியே அனுப்ப வேண்டும். எங்கே அனுப்புவது? மந்தையின் துருக்கத்துக்கு. குழந்தையைப் பெற்றெடுக்க தனித்த இடம் இல்லாதபடியினால் (கிரேக்கத்தில் கட்டலுமா” Kataluma – என்பதற்கு மேல்வீட்டறை என்று அர்த்தம். அது இங்கு சத்திரம் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது).
       மரியாளை மந்தையின் துருக்கத்திற்கு அனுப்பினார்கள். அவள் தன் முதற்பேறான குழந்தையைப் பெற்று குழந்தையை துணிகளில் சுற்றி முன்னனையிலே கிடத்தினாள்.  மரியாள் ஈன்றெடுத்திருக்கிற இந்த முதற்பேறான ஆட்டுக்குட்டி பழுதற்றதா என்பதை யார் சோதிக்க வேண்டும்? மேய்ப்பர்கள்தானே. அவர்கள் சோதித்துப் பார்த்தால்தான் இந்த இயேசு என்கிற ஆட்டுக்குட்டியை உலகத்தின் பாவத்திற்காக தேவாலயத்தில் பலியிட முடியும். ஆகையால்தான் தூதர்கள் முதலாவது மேய்ப்பர்களிடத்தில் போய் அறிவித்தார்கள். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். (லூக்கா 2 : 11-12)
        இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் இதற்கு முன்பும் எத்தனையோ ஸ்திரீகள் மந்தையின் துருக்கத்துக்கு வந்து தங்கள் குழந்தைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் அந்தக் குழந்தைகளைப் பற்றியெல்லாம்  தூதன் ஒன்றும் சொல்லவில்லை. ஏன் தெரியுமா? அந்தக் குழந்தைகள் எல்லம் வாழ்வதற்கென்றே பிறந்த குழந்தைகள். ஆனால் இயேசு என்கிற இந்த ஒரு குழந்தைதான் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்ப்பதற்கென்றே பிறந்த குழந்தை. ஆகையால் தூதன் மேய்ப்பர்களிடத்தில் போய் அறிவித்தான்.
       மேய்ப்பர்கள் வந்தார்கள். பார்த்தார்கள். சந்தோஷமாய் பாட ஆரம்பித்தார்கள். அவர்கள் பாட ஆரம்பித்தார்கள் என்றாலே என்ன அர்த்தம்? மந்தையின் துருக்கத்தில் முன்னனையிலே கிடத்தப்பட்டிருக்கிற இயேசு என்கிற இந்த ஆட்டுக்குட்டி முழு உலகத்தின் பாவத்தையும் சுமந்து தீர்ப்பதற்காக பழுதற்றதாய்ப் பிறந்திருக்கிறது என்பதுதான்!
        மேய்ப்பர்களைப் பொறுத்தமட்டில் தாவீது ராஜாதான் விருப்பமானவர். மேய்ப்பர்கள் தாவீது ராஜாவைக்குறித்து அடிக்கடி பாடுவது உண்டு. தாவீது ராஜாவைப் பார்த்தால் அவரோடு சேர்ந்து நானும் இப்படிப் பாடுவேன் அப்படிப் பாடுவேன் என்று பாடுவார்கள். தாவீது ராஜாவை அவர்கள் கண்கள்  கண்டதோ இல்லையோ. இராஜாதி ராஜாவை அவர்கள் கண்கள் கண்டது.
     இதை கர்த்தருடைய வேதத்தில் இருந்து விளக்கமாய்ப் பார்க்கலாம். மீகா புஸ்தகத்தில் ஏழு அதிகாரங்கள் உண்டு. இதில் ஒவ்வொரு அதிகாரத்திலும் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பை குறித்து ஒரு முன்னறிவிப்பு இருக்கிறது. அவைகளை வரிசையாகப் பார்க்கலாம். முதல் அதிகாரத்தில் அவர் வானத்திலிருந்து இறங்கிவரப்போகிறார்.(மீகா 1 : 3). அவர் எப்படிப்பட்டவராக வரப்போகிறார்? ராஜாவாக வரப்போகிறார் (மீகா 2 : 13). ராஜாவாக வரப்போகிறவர் என்ன செய்யப்போகிறார்? யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்க வருகிறார் (மீகா 3 : 8). வருகிறார் என்றால் எங்கேவந்து பிறக்கப் போகிறார்? மந்தையின் துருக்கத்துக்கு(மீகா 4 :8). மந்தையின் துருக்கமென்றால் எங்கே உள்ள மந்தையின் துருக்கம்? பெத்லெகேமிலுள்ள மந்தையின் துருக்கம்(மீகா 5 : 2). பெத்லெகேமிலுள்ள மந்தையின் துருக்கத்தின் விசேஷம் என்ன? அதில் பிறக்கிற ஆட்டுக்குட்டிகள் முதற்பேறான ஆட்டுக்குட்டிகள் (மீகா 6 : 7). பெத்லகேமிலுள்ள மந்தையின் துருக்கத்தின் விசேஷம் என்ன? அது என்ன செய்யப் போகிறது? உலகத்தின் பாவத்தை அடக்கிப்போட வருகிறது (மீக 7 : 19)  கர்த்தருடைய பிறப்பின் இரகசியத்தை இப்பொழுது அறிந்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.  
         
எனக்கன்பான தேவப்பிள்ளையே, சொந்தக் குடும்பத்தில் உள்ளவர்களால், உறவினர்களால், சக மனிதர்களால் அல்லது சக ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்டு வேதனைகளும் வருத்தங்களும் நிறைந்தவர்களாய் காணப்படுகிறீர்களோ? ஏன் என்னைப் புறக்கணிக்கிறார்கள் என்றே தெரியாமல் தவிக்கிறீர்களோ? புறக்கணிப்பால் ஏற்பட்ட காயங்கள் ஆற்ற முடியாத்தாய் இருக்கிறதோ? கலங்க வேண்டாம். மனிதர்களின் புறக்கணிப்பில் இருந்துதான் தேவனுடைய அங்கீகாரமே ஆரம்பமாகிறது. மனிதர்கள் உங்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொன்னால் உத்தரவாதம் பண்ணிக்கொள்ளுங்கள் - பரலோகம் உங்களை அங்கீகரிக்க ஆரம்பித்து விட்டதென்று. கிறிஸ்து பிறந்த நாட்களில் யூத சமுதாயமே மேய்ப்பர்களைப் புறக்கணித்தது. ஆனால் அப்படிப் புறக்கணிக்கப்பட்ட அந்த மேய்ப்பர்களைப்பற்றி பேசாத கிறிஸ்துமஸ் ஆராதனை இல்லை. கர்த்தருடைய மகிமை உங்களைச் சுற்றிலும் பிரகாசிக்கும் நாட்கள் வரும்.  யார் யாரெல்லாம் உங்களைப் புறக்கணித்தார்களோ அவர்களெல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் உங்களை கனப்படுத்தும் நாட்கள் வரும்.  Article By: Bro.Jublin