Thursday, April 21, 2016

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்

வாட்சாப்பில் விஜய்காந்த் பற்றி வந்த பதிவிற்கு என்னுடைய பதில்:
விஜயகாந்த்  மீது குறைகள் என்று கூறப்படும் 3 விஷயங்கள் : -
1. சரியாக பேசுவதில்லை -
2. நாட்டை ஆள நிர்வாகத்திறமை வேணும் -
3. கோபப்படுகிறார் - 
மேலே கண்ட குறிப்புகளின் அடிப்படையில் விஜயகாந்தின் தரப்பு இக்குறைகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டு இருப்பவைகள் என்றும் அவைகள் ஒன்றும் அவரின் தகுதிக்கு எதிரான சரியான காரணிகள் அல்ல என்றும் வாதிடும் முறையில் எழுதப்பட்டதே அந்தப் பதிவு.
  1. சரியாகப்பேசினவர்கள் அனைவரும் நாட்டிற்கு நல்லது செய்திருக்கிறார்களா என்கின்ற வகையினில் அந்த விவாதம் இருந்தது. அப்படியானால் நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் சரியாகப் பேசக்கூடாது என்று சொல்ல வருகிறார்களா? இது ஒரு எதிர்மறையான சிந்தனை!!. தெளிவாகப் பேசுவது என்பது ஒரு ஆட்சியாளர் / நிர்வாகிக்கு ஒரு அடிப்படைத்தகுதி. அந்த திறமை இல்லாதவர் எப்படி அந்தப் பதவிக்கு ஆசைப்படலாம்? மேலும் முன்பு அவர் சரியாகத்தான் பேசினார், இப்போதுதான் அவரால் உடல் நலம் காரணமாகப் பேச முடியவில்லை என்பது ஒரு வாதம். இந்தக் குறைபாடு ஏன வந்தது?? அதீதக் குடியினால் வந்த இந்தக் குறைபாட்டினை மறைத்துப் பேசுவதால் யாரை எமாற்றப் பார்க்கிறார்கள்? இது மோசமடையுமே தவிர ஒருபோதும் சரியாகாது. இவருக்கு வாக்களித்து அவர் வெற்றி பெற்றால் அவரைச் சுற்றி இருப்பவர்களே அவருடைய ஸ்தானத்தில் ஆட்சி செய்வார்கள் என்பதே நிதர்சனம்!!
  2. அடிப்படையான கல்வி அறிவு ஒரு நிர்வாகிக்குத் தேவை என்பது காலத்தின் கட்டாயம். ஒரு சாதாரண எழுத்தருக்குக் கூட பட்டப்படிப்பு தேவை என்கின்ற காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்!!. ஒரு பெரும் பொறுப்பு வகிக்க நினைக்கிறவரிடத்தில் இதை எதிபார்ப்பது நியாயம் தானே.  
இவர் நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தார் என்பது ஒரு சாதனை என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை எனத்தெரியவில்லை. எனினும் பணம் படைத்த உறுப்பினர்கள் இருக்கும் ஒரு சங்கத்திற்கு அதின் கடனை அடைப்பதா ஒரு சாதனை? இது என்ன ஒரு நிர்வாகத் திறமை என்று புரியவில்லை!! நிர்வாகத்திறமை இல்லாத பலர் ஆட்சியில் நாம் இருந்திருக்கிறோம் என்பதால் மீண்டும் ஒரு நிர்வாகத்திறமை இல்லாதவரிடம் ஆட்சியை ஒப்படைப்பதில் தவறில்லை என்பது என்ன வாதமோ!! எதிர்க் கட்சி தலைவராகச் செயல்படும் வாய்ப்பு இவருக்குக் கிட்டிய போது அதில் அவர் தனது நிர்வாகத் திறமையைக் காட்டினாரா? அ.தி.மு.க. / தி.மு.க. இவைகளுக்கு மாற்று என்று களத்தில் வந்தவர் பின்பு அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்து அசிங்கப்பட்டு மேலும் தி.மு.க. விடம் பேரம் படியாமல் இன்று ஒரு உருப்படாத கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். அம்மாவிடம் பல கோடிகள் பணம் வாங்கிகொண்டு தடம் மாறினார் என்று சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவரைத் தேர்ந்தெடுப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம்!! தேர்தல் களத்தில் இவரின் சமீபத்திய நடவடிக்கைகளை உற்று நோக்கியவர்கள் இவரை ஒரு சராசரி மனிதனாகக் கூட மதிக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது இவரை ஒரு தலைவர் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்!!
  1. கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளுவது என்பது சாதாரண ஒரு மனிதனுக்கே ஒரு முறை சார்ந்த விஷயமாக உள்ளது எனும்போது ஒரு தலைவனுக்கு அது எப்படி இருக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்!!. எவ்வளவு கோபம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டுவதில் தான் ஒரு மனிதனின் தரம் தெரியும். இவரின் கோப வெளிப்பாடுகளை பல முறை நாம் இணையதளக் காணொளிகளில் கண்டு சிரித்திருக்கிறோம். இதில் ஒரு தலைவனாக அல்ல ஒரு மனிதனாகக் கூட இவரை நாம் மதிக்க முடியாது என்பதை அனேகமாக அனைவரும் ஒப்புக்கொள்ளுவார்கள் என்று நம்புகிறேன்.!! வெள்ளத்தில் இவர் சாதித்த சாதனைகளை நாம் அறிவோம். சம்பந்தம் இல்லாத பொது மக்கள் பலரும் சாதித்ததை விட இவர் என்ன பெரிதாகச் சாதித்துவிட்டார்? இதற்காக இவரை முதலமைச்சர் ஆக்கவேண்டுமா என்ன?? காமராசரைத் தோற்கச் செய்த செயலுக்கான தண்டனையை நாம் பல வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இவரைத் தேர்வு செய்து மரண தண்டனைக்கு ஒப்பான ஒரு தண்டனையைப் பெறுக்கொள்ள வேண்டாம் என்பதே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள்.
விஜயகாந்தும் அவரைச் சேர்ந்தவர்களும் நாட்டைப் பாழாக்க வந்திருக்கும் நோய்க்கிருமிகள். இந்தத் தேர்தலில் அவர்களை பூண்டோடு தோற்கடித்து தக்க பாடம் புகட்ட வேண்டுவதே நம் நாட்டுக்குச் செய்யும் சீரிய பணி.


இறுதியாக பல காலங்கள் நாம் சிந்திக்காமல் ஓட்டுப்போட்டு உருப்படாதவர்களையே தேர்ந்தெடுத்து தலைவர்களாக்கியிருக்கிறோம். ஐந்தாண்டிற்கு ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் சிந்தித்து பயன்படுத்தி இருப்பவர்களில் நல்லவர்களைத் தேர்வு செயது ஒரு மாற்றத்தினைக் கொண்டுவர முயலுவோமாக!!! இதற்காக சிறிது நேரம் ஒதுக்கி நாட்டு நடப்புகளையும் களத்தில் உள்ளவர்களின் நிறை குறைகளையும் அலசி ஆராய்ந்து ஒரு நல்ல முடிவுக்கு வருவோம். தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கு பல தகவல்களும் புள்ளி விபரங்களும் கிடைக்கின்றன. இவைகளை ஆராய்ந்து அறிய நமக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. அனைவரும் சிரமம் பார்க்காமல் இந்த வாய்ப்பை பயன் படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். பின்னிட்டு வருந்துவதால் என்ன லாபம்?? எதிர்கால சந்ததிகளின் நலனை முன்னிட்டு இதனை நாம் அவசியம் செய்ய வேண்டும்.  

Tuesday, April 19, 2016

பின்னுட்டங்கள் - 2

பின்னுட்டங்கள் - 2



அன்புமணி ராமதாஸ் பற்றிய பதிவு: இதற்கு என்னுடைய பின்னுட்டம்:

அவர் தந்தை ஆரம்பித்த சாதியக் கட்சியின் சார்பாகத்தான் அன்புமணி முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று கூறுகிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதி அமைப்பாக இருந்து அரசியல் இயக்கமாக மாறி இருந்தாலும் தற்போது சாதிக்கு அப்பாற்பட்டு செயல் படுவதாக முன்னிலைப்படுத்திக்  கொள்ளுகிறது. யாராக இருந்தாலும் நாம் சொல்வதை பல்லாயிரம் மக்கள் கேட்பதற்கு ஒரு மேடை தேவை. இதை உருவாக்குவது ஒன்றும் ப்ளாக் ஆரம்பிப்பது போன்ற எளிதான வேலை அல்ல. கிடைத்த மேடையை பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறு? அவர் சொல்வது நன்றாய்த்தான் உள்ளது. அது செயல் வடிவில் எவ்வாறு ஆகும் என்பது அவருக்கு ஒரு வாய்ப்பளித்தால் மட்டுமே தெரியும். தற்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் மற்றும் ஆண்ட கட்சிகளின் வண்டவாளம் நமக்குத்தெரியும். எனவே முன்னிலைப்படுத்தப்படும் ஒருவருக்கு முதல்வராகும் வாய்ப்பைக்கொடுப்பதில் தவறில்லை என்பது என்னுடைய கருத்து. களத்தில் இருக்கும் நபர்களில் அன்புமணியை விட தகுதியானவர் யார்? குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!!!!!

இது குறித்து திரு.நெல்லைத்தமிழன் அவர்களின் பின்னுட்டங்களுக்கு என்னுடைய பதில்கள்:

 திரு.நெல்லைத்தமிழன் அவர்களே:
ஒருவர் முதலமைச்சர் ஆகவேண்டும் என்றால் சொந்தக் காசில் கட்டிய கல்லூரியில் அனைவருக்கும் இலவசமாகக் கல்வி வழங்க வேண்டுமா?
மது பற்றி அவர் ஒவ்வொரு மேடையிலும் விரிவாக விளக்கம் அளிக்கிறார். கா.வெ.குரு தவறு செய்து இருந்தால் சட்டம் அதைப் பார்த்துக்கொள்ளும். அன்புமணி சாதி மறுப்புத் திருமனங்களுக்கு எதிரானவர் இல்லை. காதல் என்கின்ற பெயரால் திட்டமிடப்படும் ஏமாற்று வேலைகளில் தான் அவருக்கு உடன் பாடு இல்லை எனக் கூறுகிறார். அவர் சம்பாத்தியத்திற்குக் கணக்குக் காட்ட சட்டத்துக்கு அவர் கடமைப்பட்டவ்ரே. தான் சொல்ல வேண்டியதை கூட்டம் போட்டுத் தானே சொல்லவேண்டியது இருக்கிறது. அதற்கு எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதற்கு அவர் கணக்குக் காட்டவேண்டும். இது அனைவருக்கும் பொருந்தும். நடிகர் அஜித் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதை யார் தடுத்தார்கள்? ரஜினியையும் தான் அனைவரும் அழைத்தார்கள். வந்தாரா? கடைசியில் விஜயகாந்த் தான் கிடைத்தார். ஏற்கனவே பணக்காரர் என்பதால் கொள்ளை அடிக்க வேண்டியதில்லை என்பது முதல்தர ஜோக். கொள்ளை அடிப்பவர் எல்லோரும் ஏழைகளா? யார் வேண்டுமானாலும் தங்களை உயர் சாதி என்று அழைத்துக்கொள்ளட்டுமே, யார் தடுத்தார்கள்?

நீங்கள் சொல்லும் குறை ஏதும் இல்லாதவர்கள் யார்? எரியும் கொள்ளியில் எந்தக்கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுப்பது மட்டுமே உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. அதற்க்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். மற்றபடி நெல்லைத்தமிழனோ அல்லது மதுரைத்தமிழனோ முதலமைச்சராக முன்னிலைப்படுத்தப்பட்டால் நான் ஓட்டளிக்கத்தயார். அந்தத் துணிச்சலும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டா?

Saturday, April 16, 2016

பின்னூட்டங்கள் – 1

தற்போது நான் படித்துவரும் சில இணைய தளங்களில் நான் ரசித்த பதிவுகளுக்கு பல பின்னூட்டங்கள் இட்டு இருக்கிறேன். அவைகளை இங்கு பதிந்தால் படிப்பவர்களும் ரசிக்கலாம்!!!

 அ.தி.மு.க.வின் சமீபத்திய மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு குறித்து விமரிசனம் என்ற தளத்தில் வந்த பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்:


ஐந்து வருடங்கள் ஆட்சி செய்த அம்மா கடைசி நாள்வரை தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என்று கூறிக்கொண்டுதான் இருந்தார். இப்போது தேர்தல் ஜுரம் வந்துவிட்டதால் எங்கே பின்தங்கிவிடுவோமோ என்கின்ற பயத்தில் “படிப்படியாக இறங்கிவிட்டார் என்பதே உண்மை. உண்மையிலேயே மதுவிலக்கில் ஆர்வம் இருந்தால் அவர் கூறியுள்ள படிகளில் ஒன்றிரண்டாவது தனது ஆட்சியின் கடைசிக் காலங்களில் எடுத்து இருக்கலாமே. அன்றே கருணாநிதி மற்றும் ஏனையோருக்கு நாடகமாட ஒரு சந்தர்ப்பம் இல்லாது போயிருக்கும். திட்டம் தயாரித்து குப்பையில் போடுவதுதான் அம்மாவின் திராணியா? நண்பர் காவிரிமைந்தன் அவர்களே உங்களைப் போன்ற அறிவு ஜீவிகள் கூட இவ்வாறு சப்பைக்கட்டு கட்டி ஒரு சார்பாக பதிவு இட்டால் யாரிடம் சென்று முறையிடுவது?


தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பற்றிய அறிவிப்பு குறித்து விமரிசனம் என்ற தளத்தில் வந்த பதிவிற்கு என்னுடைய பின்னூட்டம்:
தி.மு.க. தேர்தல் அறிக்கை:

தேர்தல் அறிக்கை பற்றி தளபதியின் பேட்டி

செய்தியாளர்: நேற்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கி இருப்பதாக நினைக்கிறீர்கள் ?

மு.க.ஸ்டாலின்: ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை தேர்தலின் ஹீரோஎன்று சொல்வார்கள். இந்த தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக இருக்கிறது.

செய்தியாளர்: தாங்கள் அளித்த வாக்குறுதிகளையே திமுகவும் வெளியிட்டு இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளாரே ?

மு.க.ஸ்டாலின்: அவர் எப்போதும் இப்படித்தான் தேவையற்ற வகையில் எதையாவது சொல்வார். அதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை.
நன்றி: நக்கீரன்

ஆனாலும் தளபதி காமெடியாகத்தான் சமாளிக்கிறார்!!!


தி இந்து (தமிழ்) இணைய நாளிதழில் வந்த (12/04/2016) இரு பதிவுகளில் கீழ்க்கண்டவாறு பிண்ணுட்டம் இட்டு இருக்கிறேன்.


ஜெயலலிதாவின் குட்டிக்கதை:
ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வேறு ஒருவரை கொலை செய்துவிட்டார். சாவு ஏற்பட்டது. ஏதோ சில காரணங்களினால் அந்த இடத்தைவிட்டு இவர்களால் ஓட முடியவில்லை. அதான் கொலையாளியும், அவர் கூட்டாளிகளும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அப்போது, கொலை செய்யப்பட்டவரின் உற்றாரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கே ஓடி வந்தனர். அய்யோ நண்பா நீ போய்விட்டாயா, அய்யோ மகனே நீ போய்விட்டாயா என்று மற்றவர்கள் கூக்குரலிட்டு அழுகின்ற போது, இந்தக் கொலையாளியும், அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யோ நண்பா நீ போய்விட்டாயா என்று கதறி, அழுது ஒப்பாரி வைத்தார்களாம். அது போல இருக்கிறது கருணாநிதி மதுவிலக்கைப் பற்றிப் பேசுவது.

பொருத்தமற்ற கதை. "ஏதோ சில காரணங்களினால் அந்த இடத்தைவிட்டு இவர்களால் ஓட முடியவில்லை" இவர்கள் மட்டும் என்ன செய்தார்கள்? பிணத்தை வைத்து காசு பார்த்தார்களா? அவர்கள் கொன்றார்கள் இவர்கள் அதை வைத்து காசு பார்த்தார்கள்!!!!!




சரத்குமார் கதை:
''ஒருமுறை மன்னரின் விரலில் காயம்பட்டதைப் பார்த்த தெனாலிராமன், 'எல்லாம் நன்மைக்கே' என்றார். கோபத்தில் அவரை சிறையில் அடைத்தார் மன்னர். அதன்பின் வேட்டைக்கு சென்ற மன்னரை, காட்டுவாசிகள் தங்கள் தேவதைக்கு பலி கொடுக்க முயன்றனர். அவரது விரலில் காயம் இருந்ததால், உடலில் குறை இருப்பதாக விடுவித்தனர். தெனாலிராமனை மன்னர் விடுதலை செய்தார். அப்போது அவர், 'நீங்கள் என்னை சிறையில் அடைக்காவிட்டால், காட்டுக்கு வந்திருப்பேன். உங்களுக்கு பதில் என்னை பலி கொடுத்திருப்பார்கள்' என்றாராம். அதுபோல் நான் எடுக்கும் முடிவு எல்லாம் நன்மைக்கே' என்றார்.

சரியான கதையைத்தான் சொல்லி இருக்கிறார். தோற்கப்போவது உறுதி. அட்லீஸ்ட் அது அவருடனாவது போகும் அல்லவா?

Monday, April 11, 2016

யார் பெறுவார் நம் அரியாசனம்?

யார் பெறுவார் நம் அரியாசனம்?

தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடித்துவிட்டது. அரசியல் விளையாட்டில் நாளுக்கு நாள் குழப்பம் குறைந்து விறுவிறுப்பு கூடிவருகிறது. களம் ஏறக்குறைய தயாராகிவிட்டது. யாருக்கு ஓட்டளிப்பது என சிந்திக்க வேண்டிய தருணம். நம் சிந்தனைக் குதிரையைத் தட்டி விடுவோம்.

யார் பட்டத்திற்கு வரவேண்டும்? இதுவரை நம்மை ஆண்டவர்கள் நம்மை எப்படி நடத்தினார்கள்? அவர்களின் ஆட்சியின் இலட்சணம் என்ன? அதனால் நாம் கண்ட பலன் என்ன? இனிமேல் ஆட்சி நடத்தப் போகின்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம்? இருப்பவர் தொடரவேண்டுமா அல்லது இருந்தவர் வர வேண்டுமா? இவர் இருவரும் இல்லாமல் வேறொருவரை நியமிக்கலாமா? நம் ஆட்சியாளர்கள் என் இப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு கொஞ்சமாவது நம் மீது அக்கறை இருக்க வேண்டாமா? இனி வருபவராவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவாரா? நம்முள் ஏராளமான கேள்விகள். காலம் அருகிக் கொண்டே வருகிறது. இவை அனைத்திற்கும் விடை கண்டே ஆக வேண்டும்.

காலங்காலமாக ஆட்சியாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள்?

1.        உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
2.        ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
3.        உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
4.        உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
5.        உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
6.        உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
7.        உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
8.        நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்

ஆளுபவர்களின் இலட்சணம் குறித்து பைபிள் கூறும் கருத்து இவை தான். மனிதனின் ஆட்சிக்கு சுய நலமே அடிப்படை. இன்றைய ஆட்சியாளர்களும் இதற்கு விதி விலக்கல்ல. எனவே நம் எதிர்பார்ப்பும் இந்தக் காரியங்களுக்குள் அடங்கினால் நமக்கு ஏமாற்றம் குறையும். அமையும் ஆட்சியாளர் சுயநலம் குறைவாகவும் பொதுநலம் அதிகமாயும் உள்ள சிந்தனை உள்ளவராக இருக்க நாம் முயற்சிப்போம். இறைவனின் கருணையால் நல்ல ஆட்சியாளர் அமைந்தால் நாம் கொடுத்து வைத்தவர்களே!! ஆனாலும் நல்ல ஆட்சியாளர் அமைய நாம் செய்ய வேண்டியது என்ன? குறைந்த பட்சம் இது போன்ற தேர்தல் நேரங்களிலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி, நாட்டு நடப்புகளை உள்நோக்கி அறிந்துகொண்டு முடிந்தவரை நமக்கு அருளப்பட்ட அறிவை பயன்படுத்தி லாஜிக்கலாக ஒரு நல்ல முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இந்த மாடர்ன் உலகில் தொழில் நுட்பம் நமக்கு பல வசதிகளை ஏற்படுத்தித் தந்து இருக்கிறது. தொலைக்காட்சி, இணையம் மற்றும் செய்தி ஊடகங்கள் அனைவருக்கும் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறோம். சிறிது காலம் மட்டும் தேவையில்லாத அரட்டை, சீரியல் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு நடப்புகளை விளக்கும் நிகழ்வுகளை அறிந்து கொண்டு அனைவருக்கும் பயன்படுமாறு ஒரு நல்ல தேர்வினை செய்ய உங்களை வாழ்த்தி இப்போதைக்கு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். ஆட்சியாளர் தேர்வு குறித்து என்னுடைய சிந்தனைகளை அடுத்த பதிவில் பதிக்கிறேன். அறுவை என்று கருதுபவர்கள் சொல்லிவிட்டு விடை பெற்றால் நன்றி உடையவனாய் இருப்பேன்!!!!!    

Sunday, April 3, 2016

அரவிந்த் கண் மருத்துவ மனை

அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் அரிய பணி

அரவிந்த கண் மருத்துவக் குழுமத்தின் தந்தை-நிறுவனர் டாக்டர் வி என அழைக்கப் பட்ட டாக்டர் வெங்கடசாமி அவர்களின் கனவு:
·          மக்களிடையே, பார்வையின்மையை ஒழிப்பது
·          அந்த மருத்துவ முறையை சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகத் தருவது
என்பவைகளே.

மருத்துவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காலத்தில். அப்போது அவரிடத்தில் இருந்த ஓய்வுக் கால நிதி அம்முயற்சிக்குப் போதியதாக இருக்க வில்லை. அப்போது உருவான புதிய வழிதான், 40% மக்களுக்கு ( சிகிச்சைக்குப் பணம் செலுத்தும் வசதி உள்ளவர்களுக்கு), பணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை, 60% மக்களுக்கு இலவசம் என்னும் தொழில் மாதிரி. 40% மக்கள் செலுத்தும் பணத்தில், 60% மக்களுக்கு சிகிச்சை.
ஆனால், 40% நோயாளிகள் தரும் பணத்தில், மீதி 60% மக்களுக்கு சிகிச்சை தருவது பெரும் சவாலாக இருந்தது. அந்தச் சவாலைச் சமாளிக்க, செலவைக் குறைப்பதே ஒரே வழி. எப்படி செலவைக் குறைக்கலாம்?
1.        மருத்துவமனைக்குத் தேவைப் படும் உதவியாளர்கள் செவிலியர் முதலியோரை, நகரத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சியளித்து, குறைவான ஊதியத்தில் பணியில் அமர்த்துதல்.
2.        அவர்களைத் தனித்துவமான பணிகளில் அமர்த்தி, அவர்களின் செயல் திறனை மேம்படுத்துதல். அதாவது, ஒரு பரிசோதனையைச் செய்யும் ஊழியர், அதை மட்டுமே நாள் முழுதும் செய்வார். இவ்வாறாக அந்த ஊழியரின் செயல்திறன் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் செலவு குறைக்கபடுகிறது.
3.        மருத்துவர்களின் ஊதியத்தை ஒரு அளவுக்கு மேல் குறைக்க முடியாது. எனவே இங்கே, அவரது செயல் திறனை மேம்படுத்த முடிவு செய்தார்கள்.  பழைய முறையில், ஒரு நோயாளி, அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படுவார். பின்பு, மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வார். அதன் பின்னர், அந்த நோயாளி அப்புறப்படுத்தப் பட்டு, அடுத்த நோயாளி உள்ளே கொண்டு வரப் பட்டு, அவர் அறுவைச் சிகிச்சைக்குத் தயார் செய்யப் படுவார். முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்படும் விநாடியில் இருந்து, அடுத்து ஒரு நோயாளி உள்ளே கொண்டுவரப் பட்டு, அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படும் விநாடி வரை, சும்மா இருப்பார்.  இங்கே தான் அரவிந்த் ஒரு புதிய முறையைச் சமைத்தது.

ஒரே சமயத்தில் அருகருகே இரண்டு அறுவை சிகிச்சை மேசைகள் அமைக்கப் பட்டன. இரண்டுக்கும் இடையே, அறுவை சிகிச்சை செய்ய உபயோகிக்கப் படும் இயந்திரம் பொருத்தப் படுகிறது. முதலில் ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குத் தயாரிக்கப் பட்டு, மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். அவர் அறுவைச் சிகிச்சை செய்யும் அதே நேரத்தில், அடுத்த மேசையில், இன்னொரு  நோயாளி அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படுகிறார். முதல் அறுவைச் சிகிச்சை முடிந்தவுடனே, அடுத்த அறுவைச் சிகிச்சையை உடனே துவக்குகிறார். முந்தைய முறையில், அறுவைச் சிகிச்சை முடிந்து, பின்னர் செய்ய வேண்டிய முறைகள் முடிந்து, அடுத்த நோயாளி  வரவழைக்கப் பட்டு, தயாரிக்கப் படும்வரை, மருத்துவர் வேலை எதுவும் இன்றி இருப்பார். ஆனால், இந்தப் புதிய முறையில், ஒரு அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன், அடுத்த அறுவைச் சிகிச்சையை உடனே தொடங்கிவிடுவதால், இந்தத் தொழிலின், மிக முக்கியமான, விலையுயர்ந்த காரணியான மருத்துவரின் நேரம் வீணடிக்கப் படாமல், அவர் செய்யும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது. எனவே, அவருக்கான ஊதியம் அதிகம் இருந்தாலும், அவர் செய்யும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 4-5 மடங்கு அதிகரிப்பதால், ஒரு அறுவை சிகிச்சைக்கான செலவு அந்த அளவுக்கு குறைகிறது.

1.        அடுத்த, மிக முக்கிய செலவு காடராக்ட் அறுவை சிகிச்சைக்குப் பின் கண்களில் பொருத்தப் படும் லென்ஸ்.  இதைக் குறைந்த விலையில் வாங்க முயன்று தோல்வியுற்ற அரவிந்த குழுமம், அதைத் தானே தயாரிக்க முடிவெடுத்து, ஒரு தொழிற்சாலையை நிறுவியது. இதனால், காடராக்ட் லென்ஸ், 90 டாலர் அளவில் இருந்து, 2-3 டாலர் எனக் குறைந்தது. இன்று, தனது தேவைக்குப் போக, உலகெங்கும் ஏற்றுமதியும் செய்கிறது. உலகின் மொத்த சந்தையில் 7% அரவிந்தின் காடராக்ட் லென்ஸ்கள்.
2.        அடுத்த மிக முக்கிய விஷயம் இந்த குறைந்த விலை அறுவை சிகிச்சை மாதிரிச் செயல்பாடு (low cost surgery model), தேவையான அளவு நோயாளிகள் இல்லையெனில், வெற்றிகரமாக இயங்காது. ஏனெனில், குறைந்த ஊதியம் பெறும் செவிலியர், குறைந்த விலை காடராக்ட் லென்ஸ் இருந்தாலும், அதி ஊதியம் பெறும் மருத்துவரின் செயல் திறன் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டு, அவர் ஒரு நாளில் மிக அதிக அறுவை சிகிச்சைகள் (ஒரு நாளுக்கு 65 எனச் சொல்லப்டுகிறது) செய்யவில்லையெனில்,  அறுவைச் சிகிச்சையின் செலவு குறையாது. எனவே, இந்த இடத்திலும் அரவிந்த் ஒரு புது தொழில் வழியைச் சமைத்தது.

கிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். இப்படி, நோயாளிகள் சேகரிக்கப் பட்டு, மருத்துவமனையின் கொள்திறனை முழுதும் பயன்படுத்தும் அளவுக்கு நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து வரப் படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன.

இவ்வளவு நோயாளிகள், மருத்து மனைக்கு வரும் வரை காத்திருக்காமல், அவர்களை அடையாளம் கண்டு, அழைத்து வருகிறார்கள். ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம்  அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அதன் பின்னும், இந்த சிகிச்சை முறை, தேவைப் படும் மக்களில் 7 சதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனில், தமிழகத்தில் மட்டுமே இன்னும் 15 அரவிந்த்கள் தேவைப்படுகிறது.

சரி. இந்தத் தொழில் மாதிரியின் பயன்கள் என்ன?
இதன் மிக முக்கிய பயன் மிகக் குறைந்த செலவு.  அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு  (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25000 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை  30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப் பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.
இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான்.  தொழில் லாபகரத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோள் – EBITDA (earnings before interest, taxes, depreciation and amortization) – இந்த அளவுகோளில், அரவிந்த் அடைந்திருக்கும் அலகு 39% சதவீதம். மிக வெற்றிகரமாகச் செயல்படும் அப்பல்லோ குழுமங்களின் EBITDA, 2015 ல் 15% இதனோடு ஒப்பீடு செய்தால் அரவிந்தின் தொழில் இரு மடங்கு லாபகரமானது.
இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ?
பொதுவாக, அறுவை சிகிச்சையின் தரம், சிகிச்சையில் வரும் பிரச்சினைகளை வைத்து ஒப்பிடப்படுகிறது. இதில் வரும் பிரச்சினைகள், இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கண் சிகிச்சை முறையில் வரும் பிரச்சினைகளில் பாதி தான் என்கிறது புள்ளி விவரம்.
ஆக, காடராக்ட் சிகிச்சை தேவைப்படும் ஏழை நுகர்வோருக்கான சேவை, உலகின் மிகச் சிறந்த தரத்தில், இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.
பாரதத்தில் முதுமையில் ஏழ்மை, மிகச் சோகமானது.  காடராக்ட் வந்து பார்வை போனால், முதியோர்கள் பெரும் பாரமாகிப் போகிறார்கள். எந்த வேலையும் செய்ய இயலாமல், சுயமரியாதையை இழந்து, சொந்த வீட்டில் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். இந்தத் தொழில் மாதிரி, அவர்களை மீண்டும் தன் குடும்பத்துக்கு உதவும் வகையில் மாற்றி அவர்களின் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்திருக்கிறது.
மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியது, அரவிந்தின் இந்த வெற்றி கரமான தொழில்மாதிரி, பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்து, ஒரு இலக்கை நோக்கிச் செயல்படுத்தப் பட்ட ஒரு முழுமையான சூழல் (eco system), வெறும் சிகிச்சை முறையல்ல. இதில், பல்வேறு தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மேலாண் நுணுக்கங்கள் அனைத்தும் ஊடுபாவாக இணைக்கப்பட்டு உள்ளன.
அரவிந்த மருத்துவக் குழுமம், வருடத்துக்கு 3 லட்சம் காடராக்ட் சிகிச்சை செய்கிறது.இதில் 1.8 லட்சம் அறுவை சிகிச்சைகள் இலவசம். இது வருடத்துக்கு 450 கோடி ஏழை மக்களின் செலவைக் குறைக்கிறது. அந்த அளவு பணம், ஏழை மக்களின் மற்ற தேவைகளுக்கு உபயோகமாகிறது. வருடத்துக்கு 1.8 லட்சம் முதியவர்கள் சமூகத்துக்கு பங்களிப்பவர்களாக அல்லது குறைந்த பட்சம் சுமையில்லாதவர்களாக மாறுகிறார்கள்.  உள்ளூரில் காடராக்ட் லென்ஸ்கள் செய்யப் படுவதால், வருடம் 170 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணி மிஞ்சி, ஏற்றுமதியில் அந்நியச் செலாவணி ஈட்டப் படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் நடக்கிறது.  தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசு தவிர்த்த மிகப் பெரும் மக்கள் மருத்துவ நலப் பணி இதுதான்.
இதில் அரசு நிர்வாகத்துக்கு ஒரு பெரும் பாடம் இருக்கிறது.   அரசு தனது நிர்வாகத்தைக் கூர்ந்து நோக்குமனால், அதன் வருவாயில், பெரும்பகுதியை பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்குச் செலவிடுகிறது. அரசின் மிகப் பெரும் செலவினம் அதுதான். அதன் இரண்டாவது பெரும் செலவினம் தான் வாங்கிய கடனுக்குச் செலுத்தும் வட்டி.
அரவிந்த் சொல்லும் பாடங்கள் சில.
1.        தனது ஏழை மக்களுக்கான சேவையை, மிக குறைந்த செலவில் எப்படிச் செயல்படுத்துவது என்பதை ஒரு முக்கியமான இலக்காக மாற்றி, தொடர்ந்து அதை அடையும் புதிய வழிகளைச் சமைப்பது.
2.        அரவிந்த் போன்ற அரசுக்குச் செலவில்லாத, வெற்றிகரமான மாதிரிகளை ஊக்குவித்து, அவற்றை நாடெங்கும் எடுத்துச் செல்லத் தூண்டுவது.
3.        எல்லா இசத்தையும் விட்டு விட்டு, ப்ராக்டிக்கலிஸத்தைப் பிடித்துக் கொண்டு, இந்தியாவில் எது வெற்றிகரமாகச் செயல்படுகிறதோ, எது சாத்தியமோ அதை முன்னிறுத்திச் செயல்படுவது.
4.        புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் முறைகளும், லாபத்தை முன்வைத்து இயங்காத, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் வரும். அதை முன்னெடுக்கும் தலைமைகளை ஊக்குவித்தல்.
இந்தியாவில் அனைவருக்கும் பார்வைக் குறைபாட்டை நீக்க இலவச மருத்துவமனைகளையோ, அன்றி தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளையோ ஊக்குவிப்பதையோ விட, இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் அரவிந்த் குழும மாதிரியை நாடெங்கும் எடுத்துச் செல்லுமாறு பணித்தால், மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாக, உலகின் மிகச் சிறந்த சிகிச்சை, இந்திய ஏழைகளுக்குக் கிடைக்கும். இதை நிர்வகிக்க அரசுக்கு ஒரு துறையும், அதற்கான செலவும் மிச்சம். தேவையெல்லாம், திறந்த மனது மட்டுமே.  

நன்றி: http://solvanam.com/