Tuesday, March 14, 2017

ஆஸ்டின்பட்டி ஆஸ்பத்திரி

விகடனில் வந்த ஒரு கட்டுரை:
மதுரை டு விருதுநகர் பைபாஸ் சாலையில் நின்று, “தோப்பூர் அரசு தொற்றுநோய் ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது?” என்று கேட்டால், “எதுஅந்தக் காட்டு ஆஸ்பத்திரியா?” என்று கேட்டுவிட்டுத்தான் வழிகாட்டுகிறார்கள்.
பிரதான சாலையில் இருந்து பிரியும் ஒரு பாதையின் இறுதியில் கனத்த இரும்பு கேட்டுடன்கூடிய கட்டடங்கள் தொடங்குகின்றன. முகப்பில் `பழ விருட்சங்கள்என எழுதப்பட்டுள்ள பகுதிகளில் மா, பலா, கொய்யா மரங்கள் நிறைந்திருக்கின்றன. அதன் அருகிலேயே அந்த மரத்தை நட்ட நோயாளியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
அவற்றைக் கடந்து நடந்தால், பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைக்குள் நுழையும் உணர்வு ஏற்படுகிறது. விதவிதமான செடி கொடிகள், நேர்த்தியாகப் பராமரிக்கப்படும் பூந்தோட்டம் சூழ அமைந்திருக்கிறது
மருத்துவமனை வளாகம். ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட், காய்கறித் தோட்டம், அழகுற வண்ணம் தீட்டப்பட்ட நடைபாதைகள், நோயாளிகளுடன் வந்தவர்கள் அமர்ந்து இளைப்பாற சுத்தமான
திறந்தவெளிக் கட்டடங்கள், பறவைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட சிறு குளங்கள்என, திரும்பும் பக்கமெல்லாம் ஆச்சர்யங்கள்.
வார்டுகளில் அவ்வளவு தூய்மை. உள்ளே டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், மெல்லியச் சத்தத்தில் வானொலி ஒலித்துக்கொண்டிகிறது. ஒரு வார்டின் முகப்பில், சற்று குணமடைந்த நோயாளிகள் தையல் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
வேறொரு பக்கம், நோயாளிகளுக்கு முடி திருத்தும் சலூன் இயங்கிக்கொண்டிருக்கிறது.
தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில்தான் இருக்கிறோம் என்ற உணர்வே எழவில்லை. நோயாளிகளும் அப்படியான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
எப்படி இது சாத்தியம்?” என்று எவரைக் கேட்டாலும், அந்த ஒற்றை மனிதரை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். அவர்தான் மருத்துவர் காந்திமதிநாதன். தோப்பூர் மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ).
நான் எதையும் மாத்திடலை சார். எல்லாருமே அவங்கவங்க வேலையை ஒழுங்கா செய்றோம். அவ்வளவுதான்என, தன்னடக்கத்துடன் பேசுகிறார் டாக்டர் காந்திமதிநாதன்.
காசநோய், காலரா, அம்மை போன்ற நோய்கள், வெகு எளிதில் மற்றவர்களுக்குத் தொற்றக்கூடியவை. இந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக, மதுரையில் இருந்து 18 கி.மீ தொலைவில் தோப்பூர்-ஆஸ்டின்பட்டி என்ற இடத்தில் 1960-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது இந்த மருத்துவமனை. 207 காச நோயாளிகளும், 28 காலரா நோயாளிகளும், 50 அம்மை நோயாளிகளும் தங்கும் வசதிகொண்ட இந்த மருத்துவமனை, தென்தமிழக மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையளித்தது.
சுமார் 325 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உள்நோயாளிகள் பிரிவாகச் செயல்படுகிறது. தொற்றுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்பதாலும், நகரைவிட்டுத் தொலைவில் இருப்பதாலும் மருத்துவர்களும் சரி, ஊழியர்களும் சரி இங்கே பணிபுரிய தொடக்கத்தில் இருந்தே விரும்புவதில்லை.
`தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திடுவேன்என்பதுபோல அரசு மருத்துவர்களுக்கான தண்டனைக் களமாக மாற்றப்பட்ட இடம்தான் இந்தத் தோப்பூர் அரசு மருத்துவமனை. அக்கறையின்மையும் பராமரிப்பின்மையும் மருத்துவமனையின் பெயரைக் குலைத்துவிட்டன.
பல லட்சம் மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கவேண்டிய இந்த மருத்துவமனை, தேய்ந்துபோன நிலையில்தான் இந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியாகப் பொறுப்பேற்றார் காந்திமதிநாதன்.
உண்மையில், நான் விரும்பி இந்த மருத்துவ மனைக்கு வரலை. பணிமாறுதல் கோரியபோது, எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் இந்த மருத்துவ மனைதான். அதுக்கு முன்னால் நான் இந்த மருத்துவமனையைப் பார்த்ததுகூட இல்லை. இப்படியொரு நிலையில் இருக்கும்னு எனக்குத் தெரியாது. முதல் நாள் இங்கே வந்து பார்த்தப்பவே, நாம தவறான முடிவை எடுத்துட்டோம்னு தெரிஞ்சுபோச்சு. பஸ் வசதிகூட இல்லை. ரெண்டு கிலோமீட்டர் நடந்துதான் வரணும். உடனடியா, மேலதிகாரிகள்கிட்ட `எனக்கு வேறு மருத்துவமனைக்கு டெபுடேஷன் போட்டுத் தாங்க சார்ன்னு கேட்டேன். எல்லா இடங்கள்லயும் புதர்கள். கால் வைக்கவே பயமா இருக்கும். திடீர்னு பாம்புகள் ஓடும். இரவு நேரத்தில் சொல்லவே வேணாம்.
காலரா, காசநோய் பற்றி எல்லாம் பொது மக்களுக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை. அதனால் முற்றிய நிலையில்தான் நோயாளிகளை அழைச்சுட்டு வருவாங்க. கூட இருந்தால் தொற்றிக்கொள்ளும் என்பதால், கேட்டுக்குள்ள நோயாளியை அனுப்பிட்டு சொந்தக்காரர்கள் கிளம்பிடுவாங்க. நோயாளிகளுக்கு விழிப்புஉணர்வு இல்லாததால், கீழே கால் வைக்கவே சங்கடமா இருக்கும். என்ன செய்றது, எதை மாத்துறதுன்னு எதுவுமே புரியலை.
ஒருநாள், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியிலிருந்து என்.எஸ்.எஸ் முகாம் நடத்துறதுக்காக 150 மாணவர்கள் வந்தாங்க. `நாங்க என்ன செய்யணும்ன்னு கேட்டப்போ, `இந்தப் புதர்களைப் பார்க்கும்போதே பயமா இருக்கு. முடிஞ்சா, இதை அகற்றுங்கன்னு சொன்னேன்.
மறுநாள், நான் மருத்துவமனைக்கு வந்து பார்த்தப்போ, அத்தனைப் புதர்களையும் அகற்றியிருந்தாங்க. மனசாட்சி, சுருக்குன்னு குத்துச்சு.
`யார் பெத்த பிள்ளைகளோஎந்த எதிர்பார்ப்பும் இல்லாம இவ்வளவு ஆர்வத்தோடு இந்த வேலையைச் செஞ்சிருக்காங்க.
ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற நாம, அதற்கான வேலையைச் செய்ய வேண்டாமான்னு உறுத்தல். அந்த உறுத்தலோடு வீட்டுக்குப் போனேன். வழியில் ஜஸ்டின்னு ஒரு நண்பரைச் சந்திச்சேன். நியூராலஜிஸ்ட்டா இருக்கார். என் கையைப் பிடிச்சுக்கிட்டு, `மிகச் சரியான ஒரு இடத்தைத் தேர்வு செஞ்சிருக்கீங்க.
எங்க அம்மாவுக்கு 25 வயசுல காசநோய் வந்தது. தோப்பூர் மருத்துவமனையில்தான் வெச்சுக் குணப்படுத்தினோம். அந்த மருத்துவமனையை நல்ல நிலைமைக்குக் கொண்டுவரணும். நான் என்ன உதவி வேணும்னாலும் செய்றேன்னு சொல்லி கண்
கலங்கிட்டார். அந்தக் கணமே முடிவுபண்ணிட்டேன், இனி வாழ்நாள் முழுவதும் இந்த மருத்துவமனையில்தான் இருக்கணும்னு.
நல்ல மருத்துவர்கள், அர்ப்பணிப்புள்ள செவிலியர்கள், எதற்கும் தயங்காத ஊழியர்கள்னு ஏகப்பட்ட வளம் இங்கே இருந்தது. அதை உரியமுறையில் பயன்படுத்தணும்னு நினைச்சேன். எல்லோரையும் கூப்பிட்டுப் பேசினேன். என்னைவிடவும் எல்லோரும் ஆர்வமா இருந்தாங்க. வேலைகளை மெள்ள ஆரம்பிச்சோம். இந்த மாற்றத்துல எல்லோருடைய வியர்வையும் உறைஞ்சிருக்கு. எங்களை சுதந்திரமா செயல்படவிட்ட அதிகாரிகளுக்கும் இதில் பங்கு இருக்குஎன்கிறார் காந்திமதிநாதன்.
இப்போது 140 நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். இறப்புவிகிதம் வெகுவாகக் குறைந்துவிட்டது. 6 மருத்துவர்கள், 26 செவிலியர்கள், 30 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதுதவிர, ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் உள்ளனர். இந்த மருத்துவமனையின் முகம் மாறியதில், ஒப்பந்த ஊழியர்களின் பங்கு முக்கியமானது.
ஒரே எண்ண ஓட்டத்தில் எல்லோரையும் இணைச்சதுதான் காந்திமதிநாதன் சார் செய்த முதல் வேலை. எல்லோரும் எல்லா வேலைகளையும் செய்வோம். ஸ்ட்ரெச்சர் தள்ள ஆள் இல்லைன்னா, நர்ஸே தள்ளிட்டு வருவாங்க. மருத்துவமனைக்குள்ள குப்பையை யார் பார்த்தாலும் உடனே எடுத்து அதுக்கான தொட்டியில் போடுவோம். சுய பொறுப்புணர்வு, இந்த மருத்துவமனையை மட்டும் இல்லைஎங்க வாழ்க்கை முறையையும் மாத்தியிருக்கு.
சுற்றுப்புறச்சூழலை மாத்தினதோடு நோய் பாதிக்கப்பட்டவங்களோட மனநிலையை மாத்தவும் முயற்சிசெஞ்சோம். ரொம்பவும் விரக்தியா  இருப்பாங்க. தேற்றவே முடியாது. அவங்களை உற்சாகப்படுத்துற மாதிரி ஏதாவது செய்யணும்னு முடிவுசெஞ்சோம். சாரோட நண்பர் ஒருத்தர் பத்து எஃப்.எம் ரேடியோ, ஸ்பீக்கர், சென்ட்ரல் மானிட்டர் செட்டோடு வாங்கித் தந்தார். அதை வார்டுகள்ல வெச்சோம். நல்ல மாற்றம் தெரிஞ்சது. அதன் பிறகுதான் டி.வி வாங்கினோம். அது மருத்துவமனையின் இறுக்கத்தை மொத்தமா மாத்திடுச்சு. வீடு மாதிரி எல்லோரும் நினைக்க ஆரம்பிச்சாங்க. சில நாள்கள்லயே ஒரு நூலகத்தை உருவாக்கிட்டார் காந்திமதிநாதன் சார்.
நிறைய நண்பர்கள், அவங்க கலெக்‌ஷன்ல இருந்த புத்தகங்களை எல்லாம் கொடுத்தாங்க. இப்போ 6,000 நூல்கள் இங்கே இருக்குஎனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாகரன்.
நூலகத்துக்கு எதிரே இருக்கிறது, நோயாளிகளுக்கான விளையாட்டு அறை. கேரம் போர்டு, செஸ் என, பல உள்விளையாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. பெண் நோயாளிகள், தங்கள் இடத்துக்கே பொருள்களை எடுத்துச் சென்று தாயம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம்
விளையாடுகிறார்கள். டென்னிஸ், பேட்மின்டன் கோர்ட்டுகளும் இருக்கின்றன.
எங்க டீன் எங்களோட முயற்சிகளுக்கு உத்வேகமா இருக்கார். தீவிர சிகிச்சைப் பிரிவு கேட்டோம். உடனே தந்தார். ஆக்ஸிஜன் சிலிண்டர் கேட்டப்போ, ஒரே நேரத்துல 24 பேருக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் சென்ட்ரல் சிலிண்டர் அமைச்சுத் தந்தார்.
நம்மைச் சுற்றி நிறைய நல்ல மனிதர்கள் இருக்காங்க. இங்கே நடந்த ஒவ்வொரு மாற்றத்திலும் அந்த மாதிரி மனிதர்களோட பங்களிப்பு நிறைஞ்சிருக்கு. இங்கு நடந்துள்ள பெரும்பாலான பணிகள் நல்ல மனிதர்களோட உதவியால்தான் நடந்திருக்கு. கேன்சரால் பாதிக்கப்பட்டு, அந்த நோயை வென்று மீண்ட ஒருத்தர் இங்கே வந்து, இவங்க எல்லாருக்கும் கவுன்சலிங் கொடுக்கிறார். நிறையப் பேரோட உதவியும் உழைப்பும் இதுக்குள்ள மறைஞ்சிருக்கு. இன்னும் நிறைய செய்யவேண்டியிருக்கு. மூலிகைத் தோட்டம் ஒண்ணு வெக்கணும்.
நோயாளிகளுக்கு தொழிற்பயிற்சிகளை விரிவுபடுத்தணும்…” காந்திமதிநாதனின் கனவுகள் விரிகின்றன.
பேருந்தையே கண்டிராத இந்தச் சாலைகளில் இப்போது தினமும் ஏழு முறை பேருந்துகள் வந்து போகின்றன. சிகிச்சை முடிந்து செல்லும் நோயாளிகள், செவிலியர்களையும் மருத்துவமனையையும் பிரிய மனமில்லாமல் செல்லும் அதிசயம் இங்கே நிகழ்கிறது. பாழடைந்து கிடந்த ஓர் அரசு மருத்துவமனையை, ஒரு மருத்துவரின் முனைப்பு
சிறந்த மருத்துவமனையாக மாற்றியிருக்கிறது.





நன்றி: விமரிசனம் வலைத்தளம்

1 comment:

வலிப்போக்கன் said...

தகவல்கள் அருமை......