Monday, April 11, 2016

யார் பெறுவார் நம் அரியாசனம்?

யார் பெறுவார் நம் அரியாசனம்?

தமிழ்நாட்டில் தேர்தல் சூடு பிடித்துவிட்டது. அரசியல் விளையாட்டில் நாளுக்கு நாள் குழப்பம் குறைந்து விறுவிறுப்பு கூடிவருகிறது. களம் ஏறக்குறைய தயாராகிவிட்டது. யாருக்கு ஓட்டளிப்பது என சிந்திக்க வேண்டிய தருணம். நம் சிந்தனைக் குதிரையைத் தட்டி விடுவோம்.

யார் பட்டத்திற்கு வரவேண்டும்? இதுவரை நம்மை ஆண்டவர்கள் நம்மை எப்படி நடத்தினார்கள்? அவர்களின் ஆட்சியின் இலட்சணம் என்ன? அதனால் நாம் கண்ட பலன் என்ன? இனிமேல் ஆட்சி நடத்தப் போகின்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என நாம் விரும்புகின்றோம்? இருப்பவர் தொடரவேண்டுமா அல்லது இருந்தவர் வர வேண்டுமா? இவர் இருவரும் இல்லாமல் வேறொருவரை நியமிக்கலாமா? நம் ஆட்சியாளர்கள் என் இப்படி இருக்கிறார்கள்? அவர்களுக்கு கொஞ்சமாவது நம் மீது அக்கறை இருக்க வேண்டாமா? இனி வருபவராவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவாரா? நம்முள் ஏராளமான கேள்விகள். காலம் அருகிக் கொண்டே வருகிறது. இவை அனைத்திற்கும் விடை கண்டே ஆக வேண்டும்.

காலங்காலமாக ஆட்சியாளர்கள் எப்படி இருந்திருக்கிறார்கள்?

1.        உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால் தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
2.        ஆயிரம்பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
3.        உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
4.        உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
5.        உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
6.        உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
7.        உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
8.        நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்

ஆளுபவர்களின் இலட்சணம் குறித்து பைபிள் கூறும் கருத்து இவை தான். மனிதனின் ஆட்சிக்கு சுய நலமே அடிப்படை. இன்றைய ஆட்சியாளர்களும் இதற்கு விதி விலக்கல்ல. எனவே நம் எதிர்பார்ப்பும் இந்தக் காரியங்களுக்குள் அடங்கினால் நமக்கு ஏமாற்றம் குறையும். அமையும் ஆட்சியாளர் சுயநலம் குறைவாகவும் பொதுநலம் அதிகமாயும் உள்ள சிந்தனை உள்ளவராக இருக்க நாம் முயற்சிப்போம். இறைவனின் கருணையால் நல்ல ஆட்சியாளர் அமைந்தால் நாம் கொடுத்து வைத்தவர்களே!! ஆனாலும் நல்ல ஆட்சியாளர் அமைய நாம் செய்ய வேண்டியது என்ன? குறைந்த பட்சம் இது போன்ற தேர்தல் நேரங்களிலாவது கொஞ்சம் நேரம் ஒதுக்கி, நாட்டு நடப்புகளை உள்நோக்கி அறிந்துகொண்டு முடிந்தவரை நமக்கு அருளப்பட்ட அறிவை பயன்படுத்தி லாஜிக்கலாக ஒரு நல்ல முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இந்த மாடர்ன் உலகில் தொழில் நுட்பம் நமக்கு பல வசதிகளை ஏற்படுத்தித் தந்து இருக்கிறது. தொலைக்காட்சி, இணையம் மற்றும் செய்தி ஊடகங்கள் அனைவருக்கும் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறோம். சிறிது காலம் மட்டும் தேவையில்லாத அரட்டை, சீரியல் போன்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு நடப்புகளை விளக்கும் நிகழ்வுகளை அறிந்து கொண்டு அனைவருக்கும் பயன்படுமாறு ஒரு நல்ல தேர்வினை செய்ய உங்களை வாழ்த்தி இப்போதைக்கு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். ஆட்சியாளர் தேர்வு குறித்து என்னுடைய சிந்தனைகளை அடுத்த பதிவில் பதிக்கிறேன். அறுவை என்று கருதுபவர்கள் சொல்லிவிட்டு விடை பெற்றால் நன்றி உடையவனாய் இருப்பேன்!!!!!    

1 comment:

துரை எஸ்.ஜெயச்சந்திரன். said...

50 வருட திராவிட கழகங்களின் ஆட்சி நமது பொது நிர்வாகத்தை மிகவும் சீர்குலைத்து விட்டது. இனி நல்லவர்களைத் தேடி அவர்கள் கையில் ஆட்சியைக் கொடுத்தாலும், அவர்களும் வெகு சீக்கிரம் (ஒன்றிரண்டு மாதங்களில்) கெட்டு விடுவார்கள். ஆகவே இனி ஒரு நல்ல உயர்ந்த தலைவன் வரவேண்டும். (உதாரணத்திற்கு என்னைப்போல) ஆகவே அப்படி ஒரு தலைவன் வரும்வரையில் காத்திருக்கத்தான் வேண்டும். நன்றி.