Sunday, April 3, 2016

அரவிந்த் கண் மருத்துவ மனை

அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் அரிய பணி

அரவிந்த கண் மருத்துவக் குழுமத்தின் தந்தை-நிறுவனர் டாக்டர் வி என அழைக்கப் பட்ட டாக்டர் வெங்கடசாமி அவர்களின் கனவு:
·          மக்களிடையே, பார்வையின்மையை ஒழிப்பது
·          அந்த மருத்துவ முறையை சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாகத் தருவது
என்பவைகளே.

மருத்துவத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற காலத்தில். அப்போது அவரிடத்தில் இருந்த ஓய்வுக் கால நிதி அம்முயற்சிக்குப் போதியதாக இருக்க வில்லை. அப்போது உருவான புதிய வழிதான், 40% மக்களுக்கு ( சிகிச்சைக்குப் பணம் செலுத்தும் வசதி உள்ளவர்களுக்கு), பணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை, 60% மக்களுக்கு இலவசம் என்னும் தொழில் மாதிரி. 40% மக்கள் செலுத்தும் பணத்தில், 60% மக்களுக்கு சிகிச்சை.
ஆனால், 40% நோயாளிகள் தரும் பணத்தில், மீதி 60% மக்களுக்கு சிகிச்சை தருவது பெரும் சவாலாக இருந்தது. அந்தச் சவாலைச் சமாளிக்க, செலவைக் குறைப்பதே ஒரே வழி. எப்படி செலவைக் குறைக்கலாம்?
1.        மருத்துவமனைக்குத் தேவைப் படும் உதவியாளர்கள் செவிலியர் முதலியோரை, நகரத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சியளித்து, குறைவான ஊதியத்தில் பணியில் அமர்த்துதல்.
2.        அவர்களைத் தனித்துவமான பணிகளில் அமர்த்தி, அவர்களின் செயல் திறனை மேம்படுத்துதல். அதாவது, ஒரு பரிசோதனையைச் செய்யும் ஊழியர், அதை மட்டுமே நாள் முழுதும் செய்வார். இவ்வாறாக அந்த ஊழியரின் செயல்திறன் பன்மடங்கு உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் செலவு குறைக்கபடுகிறது.
3.        மருத்துவர்களின் ஊதியத்தை ஒரு அளவுக்கு மேல் குறைக்க முடியாது. எனவே இங்கே, அவரது செயல் திறனை மேம்படுத்த முடிவு செய்தார்கள்.  பழைய முறையில், ஒரு நோயாளி, அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படுவார். பின்பு, மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வார். அதன் பின்னர், அந்த நோயாளி அப்புறப்படுத்தப் பட்டு, அடுத்த நோயாளி உள்ளே கொண்டு வரப் பட்டு, அவர் அறுவைச் சிகிச்சைக்குத் தயார் செய்யப் படுவார். முதலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்படும் விநாடியில் இருந்து, அடுத்து ஒரு நோயாளி உள்ளே கொண்டுவரப் பட்டு, அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படும் விநாடி வரை, சும்மா இருப்பார்.  இங்கே தான் அரவிந்த் ஒரு புதிய முறையைச் சமைத்தது.

ஒரே சமயத்தில் அருகருகே இரண்டு அறுவை சிகிச்சை மேசைகள் அமைக்கப் பட்டன. இரண்டுக்கும் இடையே, அறுவை சிகிச்சை செய்ய உபயோகிக்கப் படும் இயந்திரம் பொருத்தப் படுகிறது. முதலில் ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குத் தயாரிக்கப் பட்டு, மருத்துவர் அறுவைச் சிகிச்சை செய்கிறார். அவர் அறுவைச் சிகிச்சை செய்யும் அதே நேரத்தில், அடுத்த மேசையில், இன்னொரு  நோயாளி அறுவை சிகிச்சைக்குத் தயாரிக்கப் படுகிறார். முதல் அறுவைச் சிகிச்சை முடிந்தவுடனே, அடுத்த அறுவைச் சிகிச்சையை உடனே துவக்குகிறார். முந்தைய முறையில், அறுவைச் சிகிச்சை முடிந்து, பின்னர் செய்ய வேண்டிய முறைகள் முடிந்து, அடுத்த நோயாளி  வரவழைக்கப் பட்டு, தயாரிக்கப் படும்வரை, மருத்துவர் வேலை எதுவும் இன்றி இருப்பார். ஆனால், இந்தப் புதிய முறையில், ஒரு அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன், அடுத்த அறுவைச் சிகிச்சையை உடனே தொடங்கிவிடுவதால், இந்தத் தொழிலின், மிக முக்கியமான, விலையுயர்ந்த காரணியான மருத்துவரின் நேரம் வீணடிக்கப் படாமல், அவர் செய்யும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுகிறது. எனவே, அவருக்கான ஊதியம் அதிகம் இருந்தாலும், அவர் செய்யும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 4-5 மடங்கு அதிகரிப்பதால், ஒரு அறுவை சிகிச்சைக்கான செலவு அந்த அளவுக்கு குறைகிறது.

1.        அடுத்த, மிக முக்கிய செலவு காடராக்ட் அறுவை சிகிச்சைக்குப் பின் கண்களில் பொருத்தப் படும் லென்ஸ்.  இதைக் குறைந்த விலையில் வாங்க முயன்று தோல்வியுற்ற அரவிந்த குழுமம், அதைத் தானே தயாரிக்க முடிவெடுத்து, ஒரு தொழிற்சாலையை நிறுவியது. இதனால், காடராக்ட் லென்ஸ், 90 டாலர் அளவில் இருந்து, 2-3 டாலர் எனக் குறைந்தது. இன்று, தனது தேவைக்குப் போக, உலகெங்கும் ஏற்றுமதியும் செய்கிறது. உலகின் மொத்த சந்தையில் 7% அரவிந்தின் காடராக்ட் லென்ஸ்கள்.
2.        அடுத்த மிக முக்கிய விஷயம் இந்த குறைந்த விலை அறுவை சிகிச்சை மாதிரிச் செயல்பாடு (low cost surgery model), தேவையான அளவு நோயாளிகள் இல்லையெனில், வெற்றிகரமாக இயங்காது. ஏனெனில், குறைந்த ஊதியம் பெறும் செவிலியர், குறைந்த விலை காடராக்ட் லென்ஸ் இருந்தாலும், அதி ஊதியம் பெறும் மருத்துவரின் செயல் திறன் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டு, அவர் ஒரு நாளில் மிக அதிக அறுவை சிகிச்சைகள் (ஒரு நாளுக்கு 65 எனச் சொல்லப்டுகிறது) செய்யவில்லையெனில்,  அறுவைச் சிகிச்சையின் செலவு குறையாது. எனவே, இந்த இடத்திலும் அரவிந்த் ஒரு புது தொழில் வழியைச் சமைத்தது.

கிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். இப்படி, நோயாளிகள் சேகரிக்கப் பட்டு, மருத்துவமனையின் கொள்திறனை முழுதும் பயன்படுத்தும் அளவுக்கு நோயாளிகள் அரவிந்த் மருத்துவமனைக்கு அழைத்து வரப் படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன.

இவ்வளவு நோயாளிகள், மருத்து மனைக்கு வரும் வரை காத்திருக்காமல், அவர்களை அடையாளம் கண்டு, அழைத்து வருகிறார்கள். ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம்  அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள். அதன் பின்னும், இந்த சிகிச்சை முறை, தேவைப் படும் மக்களில் 7 சதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. எனில், தமிழகத்தில் மட்டுமே இன்னும் 15 அரவிந்த்கள் தேவைப்படுகிறது.

சரி. இந்தத் தொழில் மாதிரியின் பயன்கள் என்ன?
இதன் மிக முக்கிய பயன் மிகக் குறைந்த செலவு.  அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு  (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25000 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்த சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை  30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப் பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது.
இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான்.  தொழில் லாபகரத்தைக் குறிக்கும் ஒரு அளவுகோள் – EBITDA (earnings before interest, taxes, depreciation and amortization) – இந்த அளவுகோளில், அரவிந்த் அடைந்திருக்கும் அலகு 39% சதவீதம். மிக வெற்றிகரமாகச் செயல்படும் அப்பல்லோ குழுமங்களின் EBITDA, 2015 ல் 15% இதனோடு ஒப்பீடு செய்தால் அரவிந்தின் தொழில் இரு மடங்கு லாபகரமானது.
இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ?
பொதுவாக, அறுவை சிகிச்சையின் தரம், சிகிச்சையில் வரும் பிரச்சினைகளை வைத்து ஒப்பிடப்படுகிறது. இதில் வரும் பிரச்சினைகள், இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கண் சிகிச்சை முறையில் வரும் பிரச்சினைகளில் பாதி தான் என்கிறது புள்ளி விவரம்.
ஆக, காடராக்ட் சிகிச்சை தேவைப்படும் ஏழை நுகர்வோருக்கான சேவை, உலகின் மிகச் சிறந்த தரத்தில், இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.
பாரதத்தில் முதுமையில் ஏழ்மை, மிகச் சோகமானது.  காடராக்ட் வந்து பார்வை போனால், முதியோர்கள் பெரும் பாரமாகிப் போகிறார்கள். எந்த வேலையும் செய்ய இயலாமல், சுயமரியாதையை இழந்து, சொந்த வீட்டில் பிச்சைக்காரர்களாக வாழ்கிறார்கள். இந்தத் தொழில் மாதிரி, அவர்களை மீண்டும் தன் குடும்பத்துக்கு உதவும் வகையில் மாற்றி அவர்களின் சுயமரியாதையை மீட்டுக் கொடுத்திருக்கிறது.
மிக முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டியது, அரவிந்தின் இந்த வெற்றி கரமான தொழில்மாதிரி, பல்வேறு காரணிகளை ஒருங்கிணைத்து, ஒரு இலக்கை நோக்கிச் செயல்படுத்தப் பட்ட ஒரு முழுமையான சூழல் (eco system), வெறும் சிகிச்சை முறையல்ல. இதில், பல்வேறு தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள், மேலாண் நுணுக்கங்கள் அனைத்தும் ஊடுபாவாக இணைக்கப்பட்டு உள்ளன.
அரவிந்த மருத்துவக் குழுமம், வருடத்துக்கு 3 லட்சம் காடராக்ட் சிகிச்சை செய்கிறது.இதில் 1.8 லட்சம் அறுவை சிகிச்சைகள் இலவசம். இது வருடத்துக்கு 450 கோடி ஏழை மக்களின் செலவைக் குறைக்கிறது. அந்த அளவு பணம், ஏழை மக்களின் மற்ற தேவைகளுக்கு உபயோகமாகிறது. வருடத்துக்கு 1.8 லட்சம் முதியவர்கள் சமூகத்துக்கு பங்களிப்பவர்களாக அல்லது குறைந்த பட்சம் சுமையில்லாதவர்களாக மாறுகிறார்கள்.  உள்ளூரில் காடராக்ட் லென்ஸ்கள் செய்யப் படுவதால், வருடம் 170 கோடி மதிப்புள்ள அந்நியச் செலாவணி மிஞ்சி, ஏற்றுமதியில் அந்நியச் செலாவணி ஈட்டப் படுகிறது. இது ஒவ்வொரு வருடமும் நடக்கிறது.  தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே அரசு தவிர்த்த மிகப் பெரும் மக்கள் மருத்துவ நலப் பணி இதுதான்.
இதில் அரசு நிர்வாகத்துக்கு ஒரு பெரும் பாடம் இருக்கிறது.   அரசு தனது நிர்வாகத்தைக் கூர்ந்து நோக்குமனால், அதன் வருவாயில், பெரும்பகுதியை பணியாளர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்குச் செலவிடுகிறது. அரசின் மிகப் பெரும் செலவினம் அதுதான். அதன் இரண்டாவது பெரும் செலவினம் தான் வாங்கிய கடனுக்குச் செலுத்தும் வட்டி.
அரவிந்த் சொல்லும் பாடங்கள் சில.
1.        தனது ஏழை மக்களுக்கான சேவையை, மிக குறைந்த செலவில் எப்படிச் செயல்படுத்துவது என்பதை ஒரு முக்கியமான இலக்காக மாற்றி, தொடர்ந்து அதை அடையும் புதிய வழிகளைச் சமைப்பது.
2.        அரவிந்த் போன்ற அரசுக்குச் செலவில்லாத, வெற்றிகரமான மாதிரிகளை ஊக்குவித்து, அவற்றை நாடெங்கும் எடுத்துச் செல்லத் தூண்டுவது.
3.        எல்லா இசத்தையும் விட்டு விட்டு, ப்ராக்டிக்கலிஸத்தைப் பிடித்துக் கொண்டு, இந்தியாவில் எது வெற்றிகரமாகச் செயல்படுகிறதோ, எது சாத்தியமோ அதை முன்னிறுத்திச் செயல்படுவது.
4.        புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் முறைகளும், லாபத்தை முன்வைத்து இயங்காத, அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் வரும். அதை முன்னெடுக்கும் தலைமைகளை ஊக்குவித்தல்.
இந்தியாவில் அனைவருக்கும் பார்வைக் குறைபாட்டை நீக்க இலவச மருத்துவமனைகளையோ, அன்றி தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளையோ ஊக்குவிப்பதையோ விட, இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் அரவிந்த் குழும மாதிரியை நாடெங்கும் எடுத்துச் செல்லுமாறு பணித்தால், மிகக் குறைந்த செலவில் அல்லது இலவசமாக, உலகின் மிகச் சிறந்த சிகிச்சை, இந்திய ஏழைகளுக்குக் கிடைக்கும். இதை நிர்வகிக்க அரசுக்கு ஒரு துறையும், அதற்கான செலவும் மிச்சம். தேவையெல்லாம், திறந்த மனது மட்டுமே.  

நன்றி: http://solvanam.com/

2 comments:

selva said...

அருமையான பதிவு.மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.👍

Unknown said...
This comment has been removed by the author.