Sunday, May 15, 2016

யாருக்கு உங்கள் ஒட்டு?

தேர்தல் நேரம் நமக்கு ஒரு திருவிழா நேரம் போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் நடக்கப்போவது என்னவோ நமக்கு ஒரு பணியாளனைத் தேர்ந்து எடுக்கும் சடங்குதான்!! ஆனால் நம் மனதில் இது இப்போது ஏதோ நமக்கு ஒரு புது முதலாளி கிடைக்கப்போவது போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. இவ்வாறான நிலைமையை நம் ஆட்சியாளர்கள் நம்மில் பலருக்கு ஏற்படுத்திவிட்டார்கள். முதலமைச்சர் என்பவர் நமக்கும் நம் தலைமுறைக்கும் தேவையான நல்ல திட்டங்களை வகுத்து நாம் வசதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ தன்னுடைய உழைப்பினைக் கொடுக்க நம்மால் பணியமர்த்தப்படும் ஒரு பணியாள். மாறாக கடந்த அரை நூற்றாண்டாக  நாம் தேர்ந்து எடுத்த ஆட்கள் அனைவருமே நமக்கு முதலாளிகளாக ஆகிவிட்டதோடு அல்லாமல் அவர்கள் குடும்பமும் அவர்கள் வாரிசுகளும் ஆண்டாண்டு காலமாக வசதியுடன் வாழும்படி நம்மையே சுரண்டி கொழுத்துவிட்டார்கள். அதனால் இப்போது அவர்கள் முதலாளிகளாகவும் நாம் அவர்களின் காலுக்குக் கீழ் இருப்பவர்களாகவும் மாறிவிட்ட சூழ்நிலை உருவாகிவிட்டது. நமது அஜாக்கிரதைதான் இதற்குக் காரணம்!!
நல்லவேளை!! ஐந்தாண்டுக்கு ஒருமுறை நமக்கு இருக்கும் வாய்ப்பினால் அவர்கள் தங்களின் நிலையை வெளிக்காட்டிக்கொள்ள இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு வாய்பொத்தி கரம் கூப்பி கூழைக்கும்பிடு போடுகிறார்கள். காரியம் முடிந்தவுடன் உச்சந்தலையில் ஏறிக்கொள்ளுவார்கள். இந்தமுறையாவது நாம் விழித்துக்கொண்டு சுதாரிப்பாக இருக்கவேண்டும்.

ஏற்கனவே நாம் நியமித்தவர்கள் திருத்த முடியாத அளவுக்குக் கெட்டுப்போய் விட்டார்கள். எனவே இம்முறை அவர்கள் வேண்டாம். போதுமான அளவுக்கு அவர்களுக்கு வாய்ப்பு நல்கியாகிவிட்டது. இந்த ஜென்மங்கள் இனித்திருந்தாது. அவர்களைத் தூக்கி எறியுங்கள். புதிய வாய்ப்புக்குக் காத்து நிற்பவர்களை கவனிப்போம்.

  • மக்கள்நலக்கூட்டணி என்பது ஒரு அரைவேக்காட்டு அவியல். பரம்பரைக் கூத்தாடியும் (விகா) பஞ்சத்துக்குக் கூத்தாடியும் (வைகோ) கதைக்கு ஆகாத தத்துவங்கள் பேசி வேலையைக் கெடுக்கும் வேலையற்றவர்களையும் (கம்யுனிஸ்ட்டுகள்) தங்களை மனிதர்கள் என்றே ஏற்றுக்கொள்ளாதவர்களையும் (வி.சி.) தாங்கள் யார் என்றே சொல்லத் தெரியாதவர்களையும் (த.மா.க.) கொண்ட இந்த அவியல் நமக்குப் பயன்படாது.
  • மத்தியில் ஆட்சி செய்பவர்கள் முதலில் அதை ஒழுங்காகச் செய்யட்டும். பின்பு பார்க்கலாம். அதிலேயே ஆயிரம் விமரிசனம் வருகிறது.
  • நமக்கு வேலை செய்வதைவிட நமது சொந்தக்காரர்கள் வீட்டுக்கு (ஈழம்) வேலை செய்வதில் முனைப்புக்காட்டும் சீமானும் நமக்கு பயன்படமாட்டார். இவர் நம்மையே வெளிநாட்டான் என்று சொன்னாலும் சொல்லுவார். இவர் தகுதி பெறுவாரா என்று அடுத்த தேர்தல் வரை விட்டுவைப்போம்.
  • எஞ்சி நிற்பவர் அன்புமணி மட்டும் தான். இவரை சாதி வெறியர் என்று முத்திரை குத்துகிறார்கள். அவரது சாதி வெறி அவரோடு இருக்கட்டும். நம்மிடம் கொண்டு வந்தால் தூக்கி எறிந்து விடுவோம். படித்தவர், விவரமானவர், ஏற்கனவே மத்திய சுகாதார அமைச்சராக நன்றாய்த்தான் பணி ஆற்றியிருக்கிறார். இப்போது சாதீயம் பேசுவது இல்லை என உறுதியளிக்கிறார். ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தான் பார்த்தால் என்ன? இதுவரை நடந்த கேட்டைவிடவா அதிகம் நடந்துவிடப்போகிறது? துணிந்து இவருக்கு வாய்ப்பளிப்போம். நல்லதே நடக்கும்.

இதைத்தவிர வேறு நம்மால் என்ன செய்ய முடியும்???????
உங்கள் வீட்டுக்கு ஒரு பணியாளை அமர்த்த எப்படி செயல்படுவீர்களோ அதே உணர்வுடன் செயல்படுங்கள்.   

No comments: