Thursday, May 19, 2016

மாற்றம்-ஏமாற்றம்!!

என்னுடைய முந்தய பதிவுகளில் இந்தத் தேர்தலில் பா.மா.க. வுக்கு வாக்களிக்க வேண்டி காரணங்களுடன் எழுதியிருந்தேன். என்னுடைய நட்பு, உறவு வட்டங்கள் அனைவரும் போயும் போயும் ஒரு சாதீய வாதம் பேசும் கட்சிக்கா வாக்களிக்கச் சொல்லுகிறாய்? என்று கிண்டலடித்தார்கள். அதற்கு நான் பா.ம.க. ஒரு சாதி அமைப்பிலிருந்து உருவாகி இருந்தாலும் இப்போது அது ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்திற்கான அரசியல் இயக்கம் என்று தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அதனுடைய முதல்வர் வேட்பாளரின் தகுதி திறமை களத்தில் இருக்கும் யாருக்கும் இல்லை. ஒரு வாய்ப்புக்கொடுத்துப் பார்ப்பதில் தவறில்லை என்று கூறி சமாளித்தேன். அன்புமணி தன்னை ஒரு தலைவராக முன்னிலைப்படுத்த அவர் தந்தை மூலம் கிடைத்த சாதீய வண்ணம் பூசப்பட்ட மேடையைப் பயன் படுத்தியதில் என்ன தவறு என வாதிட்டேன் இப்போது ரிசல்ட்டைப் பாருங்கள். அவருக்கு அவரது வட்டத்திற்கு வெளியே எந்த ஓட்டும் கிடைக்கவில்லை. எவ்வளவு அலைந்து மாற்றம் முன்னேற்றம் என்று கூவிக்கூவி அழைத்துப்பார்த்தாலும் நம் அறிவாளிகள் அதற்கு செவி சாய்க்கவில்லை. பழைய குட்டையிலேயே தாவி இருக்கிறார்கள். அவரை ஓரளவிற்குக் கூட ஊக்குவிக்கவில்லை. அவருடைய வட்டம் மட்டும் இல்லாதிருந்தால் அவரின் நிலைமை என்ன என்று யோசித்தீர்களா? வைகோ, விஜயகாந்த், சீமான் போல துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓட வேண்டியதுதான். நல்ல வேளை! அவரது வட்டம் அவரைக்காப்பாற்றியது. இன்று 5.3 % வாக்கு வங்கியுடன் முன்றாவது இடத்திலாவது இருக்கிறார். அவரை சாதியவாதி என்று திராவிடக் கட்சிகள் தங்கள் சுய லாபத்திற்காக விமரிசனம் செய்தன. ஆனால் அறிவு ஜீவிகள் கூட அதை நம்பி அவர் தனது வட்டத்திற்கு வெளியே ஒரு அரசியல் கட்சி சார்ந்தவராக அடையாளப்படுத்திக்கொண்டும் கூட அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கவில்லை. அவருக்கு வாய்ப்புக் கிடைத்தால் தானே அவரின் சாதீய வட்டத்திற்கு வெளியே செயல்பட்டு அவரின் திறமையை நிரூபிக்க அவரால் முடியும். அவர் சாதியவாதி என்றே வைத்துக்கொள்ளுங்கள். அவர் என்ன தான் செய்துவிடுவார்? மற்ற எல்லாச் சாதியினரையும் அழித்துவிடுவாரா? அது சாத்தியமா? அது என்ன பூச்சாண்டி? இப்போது இருக்கும் அரசியல் தலைவர்களிடையே ஒப்பீடு செய்தால் அவருக்கு என்ன குறை? அர்த்தமே இல்லாமல் ஒரு தகுதி வாய்ந்த நபரை உதாசீனம் செய்தார்கள். அவருடைய வட்டம் தான் அவரைக்காப்பாற்றியது. அவரது வட்டத்திற்கு வெளியே அவருக்கு ஆதரவு காட்டப்படாவிட்டால் அவர் எப்படி துணிந்து அவரது வட்டத்திற்கு வெளியே வருவார். இதை ஒருவரும் சிந்திப்பாரில்லை. அவரது சாதிச்சங்கப் பின்ணணியினை விமரிசனம் செய்தோர்கள் இப்போது எங்கே போனார்கள்?  எனவே அவருக்கு சாதிச்சாயம் பூசாமல் அடுத்த முறையாவது ஒரு வாய்ப்பளிக்கலாம் என்பது என்னுடைய பரிந்துரை. மற்றவர்களைப் போலவே அவரும் தவறு செய்தால் அடுத்த வாய்ப்பில் அவரைத்  தூக்கிவிட வேண்டியதுதான். பிறகு என்ன செய்வது? மறுபடியம் மாற்றம் தான். மாற்றம் ஒன்றே மாறாதது. ஏமாற்றங்கள் மாறும்!!!! 

No comments: